Thursday, June 13, 2013

புத்திகூர்மைக்கான சிறந்த வழிகள்!!

புத்திகூர்மைக்கான சிறந்த வழிகள்!!


மனுசனுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் ஒன்னு ஒன்னா வர ஆரம்பிக்கும்னும், அப்படி வர்றத தடுக்கமுடியாதுன்னும் நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால, இப்படியான பிரச்சினைகளை அனுசரிச்சுகிட்டு வாழனும்ங்கிற மனப்பக்குவத்தையும் வளர்த்துக்குவோம். இல்லீங்களா?

வயசானா வர்ற இதையெல்லாம் ஏத்துக்கிற நாம, வயசு ஏற ஏற நம்ம அறிவும் கூட வளரனும்/ஏறனும்னு நெனப்போமே தவிர, குறையனும்னு நெனக்கமாட்டோம். அப்படிக் குறைஞ்சா அதை ஏத்துக்கவும்  நம்மால முடியறதில்லை! அதுமட்டுமில்லாம, வயசாக வயசாக அறிவுப்பூர்வமாகவும், புத்திக்கூர்மையுடனும் சிந்திக்காத/ செயல்படாத ஒருத்தர ஏளனமாகவும், முட்டாளாகவும்தான் பார்க்கிறோம்!
ஆக, வயது முதிர்ச்சியோட சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் கண்டிப்பா இருக்கனும்ங்கிறதுக்காக, புத்தகம் படிப்பது, வல்லாரைக் கீரை,  வெண்டைக்காய் போன்றவை சாப்பிடுவது, இப்படி எத்தனையோ வழிகள்ல நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முயற்ச்சி பண்ணுவோம். ஆனா, இது மாதிரியான சில/பல நம்பிக்கைகளுக்கு அறிவியல்/விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லைங்கிறது உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும்!
அதனால, என்ன செஞ்சா நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முடியும்னு, விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகள, சமீபத்துல ஆய்வாளர்கள் முன்வச்சிருக்காங்க. அதையெல்லாம் படிச்சிட்டு, “கத்தியை தீட்டாம புத்தியை  தீட்டுறதுக்கு” நான் தயார், நீங்க?
 1. வைட்டமின் மற்றும் பிற ஊக்கமருந்துகளை தவிருங்கள்! (Skip the supplements)
வைட்டமின்-தாது மாத்திரைகள், அப்புறம் சில மூளை மாத்திரைகள் (அப்படித்தானுங்கோ ஆங்கிலத்துல சொல்றாங்கோ?!), (ginkgo and melatonin) இதெல்லாமே குணப்படுத்துறதா/மேம்படுத்துறதா சொல்லப்படுற எந்த செயலையும், உடல்ல செய்யுறதில்லையாம்! ஐயய்யோ….அப்படியா? ம்ம்…அது மட்டுமில்லாம, இந்த மாத்திரைகளச் சாப்பிடுறதுனால, ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல்னு இல்லாத நோயெல்லாம் வேற வந்துடுதாம்! இது என்னடா சாமீ வம்பா போச்சு?!!
2. உங்கள் மூளையைத் தூண்டுங்கள் (Tease your brain)
குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்க்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை  பெரிதாக  மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!. ஆனால், கல்வி கல்லாமை என்பது மூளை வளர்ச்சியின்மையில்தான் முடியும் என்பது உறுதி! அதனால, நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தக் கத்துக்க முயற்ச்சி செய்றீங்களோ, அவ்வளவும் உங்க முதுமைக்காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்! ஆக மொத்தத்துல, ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, எப்பவும் ஒரே puzzle சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம்! அடேங்கப்பா, இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?!
3. நிறைய மீன் சாப்பிடுங்க!
உங்கள்ல சில/பல பேருக்கு அத்தியாவசக் கொழுப்பான ஒமேகா 3 (Omega 3) பத்தித் தெரிஞ்சிருக்கும். மனச்சோர்வு போன்ற நோய்களை குணப்படுத்த இக்கொழுப்புச் சத்து பயன்படுகிறதாம். ஓஹோ?!  அதுக்காக, உடனே கடையில மாத்திரைகளா விற்கப்படுகிற Omega 3 மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க! ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளான, மீன்கள், விதைகளச் (flax seeds) சாப்பிடுங்க. ஏன்னா, மாத்திரைன்னு போனாலே, பின் விளைவுகள்னு எதாவது ஒரு வம்பு அதுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருக்க நிறைய வாய்ப்பு இருக்குதாம்! உண்மைதான்,காலாவதியான மாத்திரை விற்பனைன்னு வேற கால ரொம்பவே கெட்டுகெடக்கு. உஷாரா இல்லைன்னா, ஊத்தி மூடிடுவாங்கங்கோவ்!!
4. சும்மா சில்லுன்னு ஒரு காத்து வாங்கிட்டு வாங்க (Chill out)
மன உளைச்சல்னால, நியாபகச் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) மற்றும் இன்னும் சில பகுதிகள்ல விஷத்தன்மையுள்ள பல வேதியல் பொருள்கள் கொட்டப்படுகிறதாம்.  அதுமட்டுமில்லாம, மன உளைச்சலைக் குறைக்கும் தன்மையுள்ள, யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நியாபகச் சக்தி குறைவது பெரிதும் தடுக்கப்படலாம் என்கிறது ஆய்வு!
5. அந்தக் காப்பியை நல்லா ரசிச்சு-ருசிச்சு குடிங்க!
இந்தக் கொட்டை வடி நீர்னு சொல்றாங்களே (அதாங்க காஃபி!), இனிமே அதைக் குடிக்கும்போது, சும்மா (காலைக்) கடனேன்னு குடிக்காம, கொஞ்சம் ரசிச்சு, ருசிச்சு எல்லாம் குடிச்சிப் பாருங்களேன் (அதான், ப்ரூ விளம்பரத்துல எல்லாம் வருமே அதுமாதிரி?!). ஏன் சொல்றேன்னா, காஃபியில இருக்குற கெஃபீன் (caffeine) அப்படீங்கிற வேதிப்பொருள், மூளையை பாதுகாக்குதாமாம்! அதாவது, ஒரு நாளைக்கு நாலு கப் காஃபி குடிச்சா, அல்ஷெய்மர்ஸ் (Alzheimer’s) அப்படீங்கிற ஒரு வகை நியாபகங்களை அழிக்கிற தன்மையுள்ள நோய் வராம  தடுக்குதாமாம் இந்தக் கெஃபீன் ( 30 to 60 % வரை!). ஆனா, இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன்லேர்ந்து வருதா, ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அப்படீங்கிற வேதிப்பொருள்லேர்ந்து வருதான்னு தெரியலியாமாம்! இந்த மூளைப்பாதுகாப்பு, இன்னைக்கு மத்தியானம் குடிக்கிற காஃபியால, பல வருஷத்துக்கு இருக்குமாம்! அடங்கொக்காமக்கா…..சொல்லவேல்ல?!
6. நன்றாக உறங்கி கனவு காணுங்கள்!
நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காணச் சொன்னாரு! விஞ்ஞானம் என்ன சொல்லுதுன்னா, நல்லா தூங்கி கனவு காணச் சொல்லுது. அதாவது, ஒருவர் சரியான நேரத்தை ஒதுக்கி உறங்கும்போது, கனவுகள் வரும். அப்போது, ஒருவரின் நியாபகங்களின் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்குமாம். ஆனா, சரியா தூங்கலைன்னா, நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்க்கும் திறன் குறைந்துபோகிறதாம்! மிக முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!
7. உடலைப் பேணி பாதுகாத்தல் அவசியம் (Take care of your body)
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொழுப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்!  உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்க்கும் திறனையும், நியாபகச் சக்தியையும் பெரிதும் பாதிக்கின்றனவாம்! ரத்த ஓட்டம் (இருதயத்தை) சீராக வைத்துக்கொண்டாலே (உதாரணத்துக்கு புகைப்பிடிக்காமல், கொழுப்புச் சத்தை ஒதுக்கி) முதுமையினால் வரும் மூளைக்கோளாறுகளை குறைத்துக்கொள்ளலாமாம்! பார்த்து சூதானமா இருந்துக்குங்க நண்பர்களே…!!
8. உணவுக் கட்டுப்பாடை கவனியுங்கள் (Watch that diet)
உணவை அதிகமாக சாப்பிட்டால், மூளையைச் சோர்வாக்கி, பாதிக்கிறதாம்! அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்று மிகவும் குறைவாக சாப்பிட்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அநியாயத்துக்கு டயட்டிங்/உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு மனஅமைதி (?)  கிடைக்குமென்றாலும், அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம்! இது என்ன வம்பாப் போச்சு?!
9. சரிவிகித உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!
உணவிலிருந்து கிடைக்கக்கூடிய மிக அதிகமான/குறைவான சக்தியானது மூளையின் மிருதுவான செயல்பாட்டை பாதிக்கிறது. ஆனால், இனிப்புச் சத்து குறைந்த, அதிக நார்ச்சத்துள்ள, மிதமான அளவில் கொழுப்பும், புரதமும் உள்ள உணவை சாப்பிட்டால், உடலின் செரிமானச் செயல்பாடானது, சீரான அளவில் நடந்து, உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாத்து, சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறதாம்!!
10. சும்மா இல்லாம எதையாவது செய்யுங்க!
என்னப்பா, குத்து மதிப்பா எதையாவது செய்யுங்கன்னு சொல்றியேன்னு கேக்குறீங்களா? அதாவதுங்க, உடற்பயிற்ச்சின்ன உடனே, பலு தூக்கனும், தண்டால் செய்யனும், ஓடனும்னு லிஸ்ட் போட்டு யோசிக்கறதுதான் நிதர்சனம். ஆனா, மூளை ஆரோக்கியத்துக்கு என்ன செய்யனும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்கன்னா, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உங்களால் முடிந்த/பிடிச்ச எதாவது ஒரு உடற்பயிற்ச்சியை செய்தால் மட்டுமே போதுமானதாம். அது நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம். எல்லாம் சேர்ந்ததா இருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! இதத்தான் எதையாவது செய்யுங்கன்னு சுருக்கமாச் சொன்னேன். சரிங்களா?
என்னங்க புத்தியைத் தீட்ட கெளம்பிட்டீங்க போலிருக்கு?! சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கைமுறையை பின்பற்றி உங்க புத்திக்கூர்மையை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சாதிக்க மேலிருப்பானின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Thanks: http://tamilarkalinsinthanaikalam.blogspot.com

No comments:

Post a Comment